முருகன் ஆலயங்களில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள முருகன் ஆலயங்களில் மாசித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடைபெறும் முக்கிய விழாக்களின் ஒன்றான மாசித் திருவிழா கொடியேற்றத்துடன் இன்று துவங்கியது. இதனையொட்டி அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனையும், உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றன. இரண்டாம் பிரகாரத்தில் உள்ள செப்பு கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்ற பின்னர், அதிகாலை 5 மணிக்கு கொடியேற்றப்பட்டது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா என கோசமிட்டு தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் மார்ச் 8-ஆம் தேதி நடைபெறவுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் முருகன் கோயிலில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. சுவாமிக்கு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜை நடைபெற்றது. இதையடுத்து இன்று காலை மேளதாளங்களுடன், வேத மந்திரங்கள் முழங்க,கொடியேற்றப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் திருவிழா மார்ச் 5 ஆம் தேதி நடைபெறுகிறது.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சுப்பிரமணியசுவாமி திருக்கோவில் மாசித்திருவிழாசையொட்டி கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். முன்னதாக, காலை 7.30-மணிக்கு முருகப்பெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தினந்தோறும், மலைக்கோயில் மாடவீதியில் காலை மாலை என இருவேளைகளில் முருகப்பெருமான் பல்வேறு வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளிக்கவுள்ளார்.

Exit mobile version