விருப்பப்பட்ட டிவி சேனல்களை பார்க்க தனி கட்டணம் செலுத்த வேண்டும் என்ற டிராயின் புதிய உத்தரவுக்கு மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. டிசம்பர் 30 ஆம் தேதி முதல் விருப்பப்பட்ட டிவி சேனல்களை பார்க்க வாடிக்கையாளர்கள் தனி தனி கட்டணம் செலுத்த வேண்டும் என கடந்த 18 ஆம் தேதி டிராய் அறிவிப்பாணை வெளியிட்டது.
இதனை எதிர்த்து சென்னை மெட்ரோ கேபிள் ஆப்ரேட்டர்கள் சங்கம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. சென்னை உள்ளிட்ட பல பகுதிகளில் கேபிள் இணைப்புகள் முழுமையாக செட் டாப் பாக்ஸ்-க்கு மாறாத நிலையில், விருப்பப்பட்ட சேனல்களுக்கு தனி கட்டணம் வசூலிப்பது இயலாத காரியம் என்று குறிப்பிடப்பட்டது.
எனவே டிராயின் இந்த அறிப்பாணைக்கு தடை விதிக்க கோரி மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, டிசம்பர் 30 ஆம் தேதி முதல் விருப்பப்பட்ட டிவி சேனல்களை பார்க்க தனி கட்டணம் செலுத்த வேண்டும் என்ற உத்தரவு, ஜனவரி 30 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக டிராய் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.
இதையடுத்து, ஜனவரி 3 ஆம் தேதிக்குள் பதிலளிக்க, மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை மற்றும் டிராய்க்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.