குடும்பத் தகராறு காரணமாக குழந்தைகளை பள்ளத்தில் வீசிக் கொன்ற தந்தை

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலையில் குடும்பத் தகராறு காரணமாக இரண்டு குழந்தைகளை 250 அடி பள்ளத்தில் தூக்கி வீசிக் கொன்ற தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர்.

கொல்லிமலை அடுத்த அரசம்பட்டி பகுதியைச் சேர்ந்த சிரஞ்சீவி -பாக்கியம் தம்பதியினருக்கு 8 வயதில் கிரிதாஸ் என்ற மகனும், 5 வயதில் கவிதர்ஷினி என்ற மகளும் உள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு சிரஞ்சீவிக்கும் அவரது மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிரஞ்சீவி தனது இரு குழந்தைகளையும் அழைத்து சென்று, செம்மேடு சீக்குபாறை பகுதியில் அமைந்துள்ள வியூ பாயிண்ட் மீது ஏறி சுமார் 250 அடி பள்ளத்தில் இரு குழந்தைகளையும் தூக்கி வீசி விட்டு சென்றதாக கூறப்படுகிறது. பின்னர் மனமுடந்த சிரஞ்சீவி குழந்தைகளின் புகைப்படத்தைக் கண்டு அழுததால், சந்தேகமடைந்த அவரது மனைவி பாக்கியம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சிரஞ்சீவியிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், குழந்தைகளை வியூ பாயிண்ட்டில் இருந்து வீசியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து குழந்தைகளின் உடல்களை மீட்ட காவல்துறையினர் தந்தை சிரஞ்சீவியை கைது செய்தனர்.

Exit mobile version