சர்வதேச அளவில் வேகமாக வளரும் பொருளாதார சக்தியாக இந்தியா நீடிக்கும் என சர்வதேச செலாவணி நிதியம் தெரிவித்துள்ளது.சர்வதேச பொருளாதார வளர்ச்சி குறித்த தனது அறிக்கையை ஐ.எம்.எப் எனப்படும் சர்வதேச செலாவணி நிதியம் வாஷிங்டனில் வெளியிட்டுள்ளது. இதில் சர்வதேச அளவில் வேகமாக வளரும் பொருளாதாரத்தை கொண்ட நாடாக இந்தியா நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்தியாவின் பணவீக்கமும் தொடர்ந்து கட்டுக்குள் இருக்கும் என்று ஐஎம்எப் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்தியாவின் வளர்ச்சி 7.3 சதவீதமாக இருந்த நிலையில், இந்த ஆண்டில் 7.5 சதவீதமாகவும், 2020-ஆம் ஆண்டில் 7.7 சதவீதமாகவும் இருக்கும் என்றும் அந்த அமைப்பு கணித்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவுடன் ஏற்பட்டுள்ள வர்த்தகப் போர் உள்ளிட்ட காரணங்களால் சீனாவின் பொருளாதார வளர்ச்சியில் சிறிது சுணக்கம் ஏற்படும் என்றும் ஐ.எம்.எப் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.இந்த ஆண்டில் உலகின் மிகப்பெரிய பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவும், பிரான்ஸும் பிரிட்டனை பின்னுக்குத் தள்ள வாய்ப்பு உள்ளது. இதன் மூலம் இப்போது 5-ஆவது இடத்தில் உள்ள பிரிட்டன் ஏழாவது இடத்துக்கு பின்தங்கும் என்றும் ஐஎம்எஃப் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.