மனிதனுக்கு மனிதனே வாழ இடம் கொடுக்காத இந்த காலத்தில், பாம்பு குடியிருந்த காரணத்தினால், பூர்வீக வீட்டை பாம்பிற்கு கொடுத்து விட்டு, அருகில் உள்ள வேறு வீட்டில் வசிக்கிறார்கள் தஞ்சையை சேர்ந்த குடும்பத்தினர்.
தஞ்சை மாவட்டம் பசுபதிகோயில் அருகே, மணல்மேடு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடராஜன். இவரது சகோதரி வசந்தி. இவர்களது பூர்வீக வீடுதான், 21 ஆண்டுகளாக பாம்பு புத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது.21 ஆண்டுகளுக்கு முன்பு, வெங்கடராஜனின் தாத்தா ஷேசைய்யர், தற்போது புற்று இருக்கும் இடத்தில் குடிசை வீடு கட்டி வாழ்ந்து வந்துள்ளார். அந்த வீட்டிற்கு அருகில் ஒரு குடும்பத்தை வாடகைக்கு வைத்து உள்ளார், அந்த வாடகை வீட்டில் உள்ளவர்கள் நல்ல பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து, பாம்பு பிடிப்பவர்களைக் கொண்டு அந்த நல்ல பாம்பை அடித்துக் கொன்று விட்டனர்.
இந்நிலையில், சேசைய்யர் வீட்டில் சிறிய கரையான் புற்று வளர்ந்து உள்ளது. அதை சாதாரண புற்று தான் என அகற்றிவிட, சில நாட்களில் புற்று மீண்டும் பெரியதாக வளர்ந்து உள்ளது. அந்த புற்றை தேடி பாம்பும் அவ்வப்போது வந்து சென்றுள்ளது. இதனை அடுத்து, பாம்பு இருந்த இடத்தில்தான் நாம் வசிக்கின்றோம். நாம் இருக்கும் இடத்தில் பாம்பு வசிக்கவில்லை என தெரிவித்து, அந்த வீட்டை பாம்புக்கு கொடுக்க முடிவு செய்த ஷேசைய்யர், அந்த வீட்டை காலி செய்து அருகே உள்ள குடிசையில் வசித்து வந்துள்ளார்.
ஷேசைய்யர் இறந்த பிறகு, அவரது மகள் விஜயகுமாரி, அதன் பிறகு விஜயகுமாரியின் பிள்ளைகள் வெங்கடராஜன் மற்றும் வசந்தி என, 3 தலைமுறையாக தங்களது தாத்தா சொன்னது போல், அந்த வீட்டை பாம்பின் இருப்பிடமாக நினைத்து, தற்போது வரை அந்த பகுதி மக்கள் அனைவருமே தெய்வமாக வணங்கி வருகின்றனர்.