திமுக பிரமுகர்களின் அராஜகத்தால் கலங்கி நிற்கும் குடும்பம்

எடப்பாடி அருகே மாற்றுத்திறனாளியின் வீட்டை அபகரிக்க முயற்சி செய்யும் திமுக பிரமுகர்கள், அடியாட்களுடன் வீடு புகுந்து அடாவடி செய்வதால் குடும்பத்தினர் தவித்து வருகின்றனர். 

சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியம் பக்கநாடு ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே பார்வையிழந்த மாற்றுத்திறனாளியான ராஜேந்திரன், கடந்த 25 ஆண்டுகளாக தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்த நிலையில், அதே பகுதியை சேர்ந்த ஒருவரின் நிலத்திற்கு செல்ல வழி அமைப்பதற்காக, ராஜேந்திரனுக்கு சொந்தமான பட்டா இடத்தை, திமுக பிரமுகர்கள் குப்புசாமி, கணேசன், பேச்சியப்பன், சீனி ஆகியோர் அபகரித்து அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். அடியாட்களுடன் வீட்டுக்குள் நுழைந்த அவர்கள், முட்டுக்கல்லை தூக்கி வீசி, குளியல் அறையையும் சேதப்படுத்தினர். இதனை தட்டிக்கேட்ட ராஜேந்திரனின் குடும்பத்தினரை அடியாட்களை வைத்து மிரட்டி தாக்கியதாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டினர். வீட்டை அபகரிக்க முயற்சிக்கும் திமுக குண்டர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் கண்ணீருடன் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திமுகவினரின் அராஜக செயல்களால் கதிகலங்கி நிற்பதாக ராஜேந்திரனின் மனைவி மனக் குமுறலோடு கவலை தெரிவித்துள்ளார்.

நிலம் அபகரிக்கப்படுவதை தட்டிக்கேட்டதால், பெண் என்றும் பாராமல், தி.மு.க. பிரமுகர்கள் தகாத வார்த்தைகளால் பேசுவதுடன், கொலை மிரட்டலும் விடுப்பதாக மாற்றுத்திறனாளியான ராஜேந்திரனின் மகள் வேதனை தெரிவித்துள்ளார்.

நில அபகரிப்பு தொடர்பாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். திமுக ஆட்சிக்கு வந்தால் நில அபகரிப்புகள், கட்டப்பஞ்சாயத்துகள், அராஜகங்கள் அதிகரிக்கும் என்ற பொதுமக்களின் குற்றச்சாட்டு, இந்த சம்பவத்திலும் மீண்டும் நிரூபணமாகியுள்ளது.

Exit mobile version