ஆட்டோமொபைல் துறையில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி- காரணம் என்ன?

பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள மந்தநிலை, மின்சார வாகனங்களுக்கு மத்திய அரசு அறிவித்துள்ள சலுகைகள் ஆகியவற்றின் காரணமாக ஆட்டோ மொபைல் துறையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

மக்கள் தொகை அதிகம் உள்ள பெரு நகரங்களில் வாகனங்களின் எண்ணிக்கையும் சரசரவென அதிகரித்துவிட்டது. வாகன நெரிசல்களால் ஏற்படும் ஒலி மாசையும், கரியமில வாயுவையும் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. 19 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த ஆண்டு இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் உற்பத்தி கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளன. குறிப்பாக, முன்னணி கார் நிறுவனங்களான ஹுண்டாய், மாருதி, டாட்டா, ஹோண்டா போன்ற நிறுவனங்களின் உற்பத்தி கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு கடுமையாக வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

மின்சார வாகனங்களுக்குச் சலுகைகள் அளிப்பதாக மத்திய அரசு அறிவித்த அறிவிப்புகளே, இரு சக்கர வாகனம், கார்களின் உற்பத்தி குறைவுக்கு முக்கியக் காரணம் என்கிறார் வாகன உற்பத்தியாளர் மன்சூர் அலிகான். பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு ஆகும் பராமரிப்புச் செலவைவிட மின்சார வாகனத்தின் செலவு சுமார் 90% குறைவு என்பதால் அனைவரும் மின்சார வாகனத்தை எதிர்நோக்கிக் காத்திருக்கின்றனர்.

எலக்ட்ரிக் வாகனங்களாகட்டும், பெட்ரோல் டீசல் வாகனங்களாகட்டும் வாகன நெரிசல்களைக் குறைக்கவும், லட்சக்கணக்கான வாகனங்களால் வெளியேற்றப்படும் கரியமில வாயுவைக் கட்டுப்படுத்தவும், தனி மனிதர்கள் ஒவ்வொருவருக்காக வாகனங்கள் இயக்குவதைத் தவிர்த்துவிட்டு பொதுப் போக்குவரத்துக்கான பேருந்துகள், ரயில்களைப் பயன்படுத்த வேண்டும். அப்போதுதான் மாசற்ற நகரமாக, இல்லை வாழ்வதற்கு ஏற்ற நகரமாக இந்தப் பெருநகரங்கள் இருக்கும்.

Exit mobile version