நில அபகரிப்பு.. கடந்த திமுக ஆட்சியின் போது தமிழகம் முழுவதும் ஒலித்த ஒரே சொல்.. உரிமையாளர்களை விரட்டியடித்தும், போலி பட்டாக்களை தயாரித்தும் பிறருக்கு சொந்தமான நிலத்தை திமுகவினர் வளைத்து போட்டு வந்ததை நாடறியும். ஆனால் 30 ஆண்டுகளுக்கு முன்னர் திமுகவினர் செய்த லீலை ஒன்று சட்டத்தின் இடையறாத போராட்டத்தால் தற்போது அம்பலத்திற்கு வந்துள்ளது. அதற்கு காரணமானவரின் பின்னணி என்ன தெரியுமா? அவர்தான் ஆற்காடு வீராசாமி.. அதுகுறித்த விரிவான தகவல்களை செய்தி தொகுப்பாக தற்போது பார்ப்போம்..
சென்னையின் இதயப்பகுதியாக விளங்கும் அண்ணாநகர் பிரதான சாலையில் செயல்பட்டு வருகிறது சென்னை பப்ளிக் ஸ்கூல். இதனை திமுக முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் தம்பி தேவராஜ் என்பவர் நடத்தி வருகிறார். இந்த பள்ளிக்கு அருகாமையில் உள்ள ஒரு ஏக்கர் பரப்பளவிலான இடத்தை கடந்த 1987-ம் ஆண்டு தேவராஜ் ஆக்ரமிப்பு செய்துள்ளார். அதற்கு போலி ஆவணங்கள் தயாரித்து 1997-ம் ஆண்டு திமுக ஆட்சியில் பட்டாவும் பெற்றுள்ளார். 2001-ம் ஆண்டு இந்த இடத்தின் பட்டா போலியானது என சென்னை மாநகராட்சி கண்டுபிடித்து அதனை ரத்து செய்தது. இதனை எதிர்த்து ஆற்காடு வீராசாமியின் தம்பி தேவராஜ் சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார்.
2009-ம் ஆண்டு தேவராஜ் உள்ளிட்டோருக்கு ஆதரவாக தீர்ப்பு வெளியாக, உண்மையை நிலைநாட்ட சென்னை மாநகராட்சி சார்பில் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இடம் தொடர்பாக உரிய ஆவணங்களை நீதிமன்றத்தில் மாநகராட்சி தாக்கல் செய்தது. 7 ஆண்டுகள் நடைபெற்ற நீண்ட நெடிய சட்டப் போராட்டத்திற்கு பின்னர் கடந்த ஆகஸ்ட் மாதம் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஆனந்த வெங்கடேஷ் ஆகியோர் தீர்ப்பு வழங்கினர். ஆற்காடு வீராசாமியின் தம்பி தேவராஜ் நடத்தி வரும் பள்ளியால் ஆக்ரமிப்பு செய்யப்பட்ட இடம், மாநகராட்சிக்கு சொந்தமானது தான் என்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
போலி பட்டா தயாரித்து 30 ஆண்டுகளாக அதனை அனுபவித்தும், அபகரித்த நிலத்தில் பள்ளிக்கூடத்தை கட்டியெழுப்பி கூடுதல் கல்விக் கட்டணம் வசூலித்தும் அடங்காத திமுகவினர் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தை நாடினர். ஆனால் அங்கும் நீதியே வென்றது. திமுகவினர் ஆக்ரமிப்பு செய்த இடம் சென்னை மாநகராட்சிக்குத் தான் சொந்தமாது என்ற தீர்ப்பு நிலைநாட்டப்பட்டது.
இதையடுத்து கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய் மதிப்பிலான அந்த இடத்தை சென்னை மாநகராட்சி அதிகாரிகள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு கையகப்படுத்தினர். ஆக்ரமிப்பு சுவர்கள் பொக்லைன் எந்திரம் கொண்டு தகர்க்கப்பட்டது. இன்னும் எத்தனை எத்தனை ஏக்கர் அரசு நிலங்கள் திமுக ஆட்சியிலும், திமுகவினராலும் ஆக்ரமிப்பு செய்யப்பட்டுள்ளதோ, அவையெல்லாம் எப்போது மீட்கப்படுமோ என்ற எதிர்பார்ப்பு பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது.