பள்ளி மாணவர்களின் வருகைப் பதிவை குறுஞ்செய்தி வாயிலாக பெற்றோருக்கு தெரிவிக்கும் வசதியை அடுத்த மாதம் முதல் அமல்படுத்த கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்களின் சுயவிவரங்கள் அனைத்தும் கல்வியியல் மேலாண்மை தகவல் மையத்தில் பதிவு செய்ய கல்வித்துறை உத்தரவிட்டு இருந்தது. அதன்படி, மாணவர்களின் விவரங்கள் அனைத்தும் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கின்றன. ஆசிரியர்கள் தனியாக வருகைப்பதிவேடு பின்பற்றினாலும், இந்த இணையதளத்தில் மாணவர்களின் வருகையை பதிவு செய்ய வேண்டும் என்று கல்வித்துறை கட்டாயமாக்கி இருக்கிறது. இந்தநிலையில், மாணவர்களின் வருகைப்பதிவை பெற்றோருக்கு குறுஞ்செய்தி வாயிலாக தெரிந்து கொள்ளும் வசதியை கல்வித்துறை இணையதளத்தில் கொண்டு வந்தது.இந்த திட்டத்தின் முன்னோட்டமாக சில பள்ளிகளில் சோதனை முயற்சி செய்ததில் அது சிறப்பாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனையடுத்து, அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இந்த திட்டத்தை அடுத்த மாதம் முதல் அமல்படுத்த திட்டமிட்டு இருப்பதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.