தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சியில் மனித கழிவுகளை கைகளால் அள்ளும் அவலம் என்று சமூக ஊடகங்களில் வெளியாகி உள்ளது இந்த வீடியோ காட்சி.மாரண்டஅள்ளி பேரூராட்சியில் 15வது வார்டில் உள்ள கழிப்பிடத்தை சீரமைப்பதற்கான பணிகளில் பேரூராட்சி திமுக தலைவர் வெங்கடேசனும்,
பேரூராட்சி செயல் அலுவலர் சித்திரைக்கனியும் ஈடுபட்ட நிலையில்தான் இந்த அவலம் அரங்கேறியிருப்பதாகக் கூறப்படுகிறது.ஏற்கனவே இந்த பேரூராட்சியில் தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு மலம் அள்ளும் பணியை கொடுத்து வருவதாக தூய்மை பணியாளர்களின் சங்கம் சார்பில் மாவட்டம் நிர்வாகத்திடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் ஒப்பந்ததாரர் மூலமாக நடைபெறும் கழிவரை சீரமைப்பு பணியில் பேரூராட்சி நிர்வாகத்தின் அழுத்தம் காரணமாக கைகளால் மனிதக் கழிவுகளை அள்ளியது வெளியாகி உள்ளது.
ஆளும் கட்சி என்கிற அதிகார மமதையில்தான் இதுபோன்ற சம்பவம் நிகழ்ந்திருப்பதாகவும், வெளியில் சொன்னால் தூய்மைப் பணியாளர்களை வேலையில் இருந்து நீக்கிவிடுவதாக மிரட்டியிருப்பதாகவும் புகார் தெரிவிக்கின்றனர் அப்பகுதி சமூக ஆர்வலர்கள். தூய்மைப் பணியாளர்கள் இதுபோன்ற வீடியோவை எடுத்து தங்களை மிரட்டுவதாக பேரூராட்சி செயல் அலுவலர் சித்திரைக்கனி தரப்பில் இருந்து கூறப்படுகிறது.
தமிழக அரசுக்கும், மாவட்ட நிர்வாகத்துக்கும் தூய்மைப் பணியாளர்கள் அளித்துள்ள மனு மீது இதுவரை நடவடிக்கைஎடுக்கப்படவில்லை. மனித கழிவினை கைகளால் அள்ளுவது மனித சமூகத்தின் மாபெரும் அவமானமாகப் பார்க்கப்பட வேண்டும். தற்போது மாரண்டஹள்ளியில் நடந்துள்ளது, திராவிட மாடல் அரசின் சாதனைகளில் ஒன்றோ என்னவோ?