இரண்டாம் உலகப் போரின் வெடிக்காத குண்டுகள்: அச்சத்தில் ஜெர்மன் மக்கள்…

இரண்டாம் உலகப்போர் காலத்தில் வீசப்பட்ட 500 கிலோ எடை கொண்ட பிரமாண்ட வெடிகுண்டு ஒன்று ஜெர்மனியில் கண்டுபிடிக்கப்பட்டு, செயலிழக்க வைக்கப்பட்டு உள்ளது. ஜெர்மன் மக்களை தொடர்ந்து அச்சுறுத்தும் உலகப்போர் வெடிகுண்டுகள் குறித்துப் பார்ப்போம்…

இரண்டாம் உலகப் போர் தொடங்கக் காரணமாக இருந்த ஜெர்மனிதான், அந்த உலகப் போரால் மிக அதிக பாதிப்பையும் சந்தித்தது. இரண்டாம் உலகப் போரில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தின் விமானப் படைகள் பல லட்சக் கணக்கான வெடிகுண்டுகளை ஜெர்மனியின் மீது வீசின. அவற்றில் சில லட்சம் குண்டுகள் அப்போது வெடிக்கவில்லை, எப்போது வேண்டுமானாலும் வெடிக்கக் கூடும் என்ற அச்சம் அவை மீது இருந்தது.

இந்த வெடிக்காத வெடிகுண்டுகளில் பெரும்பாலானவை இரண்டாம் உலகப் போரின் பின்னர் கண்டறியப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டாலும், இன்றும் கூட ஜெர்மனியின் பூமிக்குள் எப்போது வேண்டுமானாலும் வெடிக்கும் அபாயமுள்ள சுமார் 2 ஆயிரம் வெடிகுண்டுகள் உள்ளதாகக் கணிக்கப்படுள்ளது. இந்த குண்டுகளில் ஒன்று கடந்த ஜூன் மாதத்தில் கூட் திடீரென தரைக்குள்ளிருந்து வெடித்தது.

இப்படிப்பட்ட வெடிகுண்டுகள் அவ்வப்போது மக்களாலும் கண்டுபிடிக்கப்படுகின்றன. ஒரு வெடி குண்டு கண்டுபிடிக்கப்படும் போது, அதை செயலிழக்கச் செய்யும் செயல்முறையில் அது வெடிக்கவும் கூடும் என்பதால், முதலில் அந்தப் பகுதியில் உள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்படுகின்றனர்.

இந்நிலையில்தான் கடந்த வாரம் பிராங்க்பர்ட் நகரில் 500கிலோ எடையுள்ள ஒரு பெரிய வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டது. இதை செயலிழக்கச் செய்வதற்கான முன்னெச்சரிக்கையாக, பிராங்க்பர்ட் நகரின் 1 கிலோ மீட்டர் சுற்றுப் பகுதியில் உள்ள 16 அயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

இதற்கு முன்னர், கடந்த ஏப்ரல் மாதம் ரோஜென்ஸ்பர்க் என்ற பகுதியில் சுமார் 250 கிலோ எடையுள்ள வெடிகுண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் சுற்றுப் பகுதியில் வசித்த 5 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டனர். அதை செயலிழக்க செய்யும்போது அந்த குண்டு பயங்கரமாக வெடித்தது. இதில், அருகில் உள்ள பல கட்டிடங்கள் சேதம் அடைந்தன. இந்நிலையில் அந்த குண்டைப் போல 2 மடங்கு பெரிய வெடி குண்டான இது பெருத்த அச்சத்தை ஏற்படுத்தியது.

ஆனால் கடந்த ஞாயிறு அன்று காலை எந்த அசம்பாவிதமும் ஏற்படாமல் பிராங்க்பர்ட் நகரின் வெடிகுண்டு செயலிழக்கவைக்கப்பட்டது. இதன் பின்னர் வெளியேற்றப்பட்ட 16 ஆயிரம் மக்களும் வீடுகளுக்குத் திரும்பி வருகின்றனர்.

காயம் ஆறினாலும் தழும்பு ஆறாது – எனப்தைப் போல, இரண்டாம் உலகப் போர் முடிந்து முக்கால் நூற்றாண்டு கடந்த பின்னரும் அதன் பாதிப்புகள் தொடர்ந்தே வருகின்றன. ஜெர்மனியின் மண்ணில் கிடைக்கும் ஒவ்வொரு வெடி குண்டும் போரின் கோர முகத்தை மக்களுக்கு உணர்த்தும் வரலாற்றுச் சான்றுகளாக உள்ளன.

Exit mobile version