சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் ராபர்ட் வதேராவை கைது செய்து விசாரிக்க கோரி, டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு தாக்கல் செய்துள்ளது. லண்டனில் சுமார் 19 லட்சம் பவுண்டுகள் மதிப்பில் சொத்து வாங்கிய விவகாரத்தில் ராபர்ட் வதேரா மீது அமலாக்கத்துறை வழக்கு தொடர்ந்துள்ளது. மனோஜ் அரோரா என்பவருடன் சேர்ந்து இந்த தொகையை மறைத்து சட்டவிரோத பணப்பரிவர்தனையில் ஈடுபட்டதாக அவர் மீது டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், இது குறித்து அவரிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் பல கட்ட விசாரணை நடத்தினர். விசாரணையில், லண்டனில் தனக்கு எந்த சொத்தும் இல்லை என்று ராபர்ட் வதேரா பதிலளித்தாகக் கூறப்படுகிறது. இது குறித்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளது. அதில், பணப் பரிமாற்ற வழக்கின் விசாரணைக்கு ராபர்ட் வதேரா ஒத்துழைக்கவில்லை எனவும், இதனால், அவரை காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.