விருதுநகர் மாவட்டம் சாத்தூரில், அமமுக வேட்பாளர் வீட்டில், வாக்காளர்களுக்கு பட்டுவாடா செய்வதற்காக வைக்கப்பட்டிருந்த 43 லட்சம் ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் சாத்தூர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தினகரன் அணி வேட்பாளர் எஸ்.ஜி. சுப்பிரமணியன் என்பவரின் சொந்த ஊரான எதிர்கோட்டை பகுதியில், தேர்தல் பணிக்காக செயல்பட்டுவந்த தேர்தல் பணிமனையில் பெருமளவு பணம் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக கிடைத்த தகவலின் பேரில், வருமான வரித்துறையினரும், தேர்தல் பறக்கும் படையினரும் சோதனை செய்தனர். முதற்கட்ட சோதனையில் அந்த அலுவலகத்தில் ஓட்டுக்கு ரூ.500 வீதம் கவர்களில் போடப்பட்டு, மொத்தம் 10 லட்சம் ரூபாய் அளவிலான பணத்தை கைப்பற்றினர்.
இது தொடர்பாக, மகாதேவன் என்பவரை காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து சோதனை செய்தபோது, அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 33 லட்சம் ரூபாயும் சிக்கியது. இதன்மூலம், மொத்தம் 43 லட்சம் ரூபாயை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும், வேட்பாளரின் உறவினர் இல்லங்களில் தொடர்ந்து சோதனை நடைபெற்று வருகிறது.