தமிழகத்தில் முதற்கட்டத் தேர்தல் நடைபெற உள்ள 156 ஊராட்சி ஒன்றியங்களில் மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது.
தமிழகத்தின் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வருகிற 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாகத் தேர்தல் நடைபெறுகிறது. இதில் 27ஆம் தேதி முதல்கட்டமாகத் தேர்தல் நடைபெறும் 156 ஊராட்சி ஒன்றியங்களில் இன்று மாலை 5 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது. மாலை 5 மணிக்குப் பிறகு தேர்தல் நடைபெறும் ஊரகப் பகுதிகளில் வெளியாட்கள் யாரும் இருக்கக் கூடாது என மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. முதல்கட்டத் தேர்தல் நடைபெறும் ஊரகப் பகுதிகளில் இன்று மாலை 5 மணி முதல் 27ஆம் தேதி மாலை 5 மணி வரை மதுக் கடைகளை மூடவும் மாநிலத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து 156 ஊராட்சி ஒன்றியங்களிலும் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடத்துவதற்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகளில் தேர்தல் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.