Fair and Lovely என்ற பெயரை மாற்ற உள்ளதாக அதன் தயாரிப்பு நிறுவனமான இந்துஸ்தான் யுனிலீவர் அறிவித்துள்ளது. ஏன் எதற்காக இந்த திடீர் முடிவு என்பதை பார்க்கலாம். ஏழே நாட்களில் சிவப்பழகு, மூன்று வாரங்களில் சிவப்பழகு என வரக்கூடிய Fair and Lovely விளம்பரங்களை அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. பெண்களின் அழகுக்கும் ஆண்களின் அழகுக்கும் தாங்கள் தான் காரணம் என மார்தட்டி விளம்பரம் செய்யும் இந்த பிராண்டின் தயாரிப்பாளர் இந்துஸ்தான் யுனிலீவர் லிமிடெட். இந்துஸ்தான் யுனிலீவர் நிறுவனம், அழகு சாதனப் பொருட்கள், க்ரீம்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஆசிய அளவில் முன்னணியில் உள்ளது. ஆனால் சிவப்பு மட்டுமே அழகென்று முன்னிலைப்படுத்தப்படும் fair and lovely விளம்பரங்கள் பழமைவாதக் கருத்துகளை திணித்து வியாபாரம் பார்ப்பதோடு கருப்பாக இருப்பவர்கள் அழகில்லாதவர்கள் என்று கட்டமைக்க முயற்சிப்பதாகவும் விமர்சனங்கள் எழுந்துவருகின்றன. அமெரிக்கா உள்பட பல நாடுகளிலும் சிவப்பு மட்டும்தான் அழகு எனும் கருத்துக்கு எதிராக எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
அதனால், அமெரிக்காவின் முன்னணி நிறுவனமான ஜான்சன் அண்ட் ஜான்சன் சிவப்பழகை முன்னிலைப்படுத்தி இந்தியாவில் விற்கப்படும் அழகு சாதனத் தயாரிப்புகளின் விற்பனையை நிறுத்துவதாக சமீபத்தில் அறிவித்தது. அதனைத் தொடர்ந்து fair and lovely யிலிருந்து Fair என்ற வார்த்தையை நீக்க உள்ளதாக இந்துஸ்தான் யுனிலீவரும் அறிவித்துள்ளது. இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டிருக்கும் அந்த நிறுவனம், அழகு என்பது வேற்றுமையில் ஒற்றுமை என்பதைக் கொண்டாடும் வகையில் எல்லா வகையான தோல் அமைப்புகளுக்கும் ஏற்றவாறு தயாரிப்புகளை சந்தைப்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளது. அதனால் தங்களுடைய தயாரிப்புகளிலிருந்து fairness, whitening and lightning போன்ற வார்த்தைகளை நீக்க திட்டமிட்டுள்ளதாகவும், அதே போல் fair and lovely-யிலிருந்து fair ஐ நீக்கிவிட்டு அந்த பிராண்டுக்கு புதுப்பெயர் சூட்ட உள்ளதாகவும் அறிவித்துள்ளது.
ஹிந்துஸ்தான் யுனிலீவரின் இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.