புத்தாண்டையொட்டி சென்னையில் 15,000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதாக காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார்.
இந்தாண்டு புத்தாண்டை சிறப்பாக கொண்டாடும் வகையில், சென்னையில் உள்ள அனைத்து நட்சத்திர ஓட்டல்களில் முன்பதிவு செய்யப்பட்டுள்ளது. புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது, எந்தவிதமான அசம்பாவித சம்பவமும் நடைபெறாமல் இருக்க, சென்னை மாநகரம் முழுவதும் 15 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கடற்கரை பகுதியில் 3 ஆயிரத்து 50 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். மெரினா, பெசன்ட் நகர் கடற்கரை பகுதியில் 500 போலீசார் சாதாரண உடையில் கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறும் ரிசார்ட்டுகள், பங்களாக்களையும் போலீசார் மாறுவேடத்தில் கண்காணிக்கவுள்ளனர். இந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது எவரேனும் அத்துமீறி செயல்பட்டால், அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போலீசார் எச்சரித்துள்ளனர். குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவது, பைக் ரேஸ் நடத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டால், ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post