பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த குடிநீர் வாரியம் வேண்டுகோள்

தமிழகத்தில் இந்த ஆண்டு வழக்கத்தை விட 69 சதவீதம் மழை குறைந்து பெய்துள்ளதால், குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குநர் மகேஷ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் வழக்கமாக பெய்யும் சராசரி மழை அளவான 108 மில்லி மீட்டரில் வெறும் 34 மில்லி மீட்டரே இந்த ஆண்டு பெய்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளார். குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய, தமிழக முழுவதும் 258 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறப்பு குழுவில் உள்ள அலுவலர்கள், குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளுடன் ஆலோசித்து குடிநீர் முறையாக வழங்கப்பட்டு வருவதை உறுதிப்படுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடிநீர் பராமரிப்பு திட்டத்தில் உள்ள குடிநீர் குழாய்களில் ஏற்படும் கசிவுகள், வெடிப்புகள் மற்றும் மின் மோட்டரில் ஏற்படும் பழுதுகளை போர்க்கால அடிப்படையில் சரிசெய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. குடிநீர் குழாய்களில் ஏற்படும் கசிவுகள், உடைப்புகள், வீணாகும் குடிநீர் ஆகியவை குறித்து பொதுமக்கள் தகவல் தெரிவிக்க சிறப்பு குறை தீர்க்கும் குழு அமைக்கப்பட்டு, 94458 02145 என்ற தொலைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

Exit mobile version