கனவாகும் அமெரிக்க வேலை… கடும் சரிவில் ‘ஹெச் 1பி’ விசா

அமெரிக்காவில் பணி புரிவதை இலக்காகக் கொண்ட ஒவ்வொருக்கும் அதற்காகக் கிடைக்கும் மிகச் சிறந்த வாய்ப்பாக ஹெச் 1பி – விசா இருந்து வருகிறது.

இந்த விசாவைப் பெற்ற ஒருவர் அமெரிக்காவில் மூன்று ஆண்டுகளுக்கு தங்கிப் பணியாற்றலாம், பின்னர் தேவைப்பட்டால் அனுமதியை இன்னும் 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கலாம்.

அமெரிக்காவில் தொடர்ந்து 6 ஆண்டுகள் தங்கி சிறப்பாகப் பணியாற்றிய ஒருவருக்கு அமெரிக்காவிலேயே நிரந்தரமாகத் தங்கிப் பணியாற்றுவதற்கு உரிய ‘கிரீன் கார்டு’ கிடைக்கும்.

இந்த சலுகைகளால் இந்திய ஐ.டி.துறையினர் ஹெச் 1பி விசாவை பெரிதும் விரும்பினர். ஆனால் இந்த விருப்பம் நிறைவேறுவதில் தற்போது சிக்கல் அதிகரித்து உள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் ‘அமெரிக்கப் பொருட்களையே வாங்குவோம், அமெரிக்கர்களையே பணியில் அமர்த்துவோம்’ – என்ற கொள்கையைக் கொண்டுள்ளதால் ஹெச் 1பி விசாவுக்கான கெடுபிடிகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன.

2017ல் 38 லட்சம் எண்ணிக்கையில் வழங்கப்பட்ட ஹெச் 1பி விசா, 2018ஆம் ஆண்டில் 33 லட்சம் எனக் குறைக்கப்பட்டது. நடப்பு ஆண்டில் இந்த எண்ணிக்கை இன்னும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் கடந்த நிதியாண்டின் முதல் 6 மாதங்களில் 85 சதவீதம் விசாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட நிலையில், இந்த நிதியாண்டில் அது 79 சதவீதமாக குறைந்துவிட்டது. இதனால் இன்னொரு பக்கம் ஹெச் 1பி விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து சரிந்து வருகிறது.

ஹெச் 1பி விசாக்கள் மறுக்கபடுவது இந்தியர்களை மட்டுமின்றி அமெரிக்க நிறுவனங்களையும், தொழிற்சாலைகளையும் கூட பாதிக்கும் என்ற நிலையில் ‘விசா கெடுபிடிகள் தளர்த்தப்படுமா?’ – என்று பொருளாதார ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Exit mobile version