கரீபியன் தீவு அருகே மையம் கொண்டிருந்த சக்தி வாய்ந்த டொரியன் புயல், இன்று பஹாமா பகுதியில் கரையை கடந்தது.
அதிபயங்கர புயலாக உருவெடுத்த டொரியன் புயலானது இன்று காலை நிலவரப்படி பஹாமாவிற்கு கிழக்கே 35 மைல் தொலைவில் மையம் கொண்டிருந்தது. இந்த நிலையில், பஹாமா பகுதியில் கரையை கடந்த போது 285 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதிபயங்கரமான டொரியன் புயலின் நகர்வை கண்காணித்து வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பஹாமா, அபாக்கோ தீவுகளில் இருந்து சுற்றுலா பயணிகள் உடனடியாக வெளியேறுமாறு தெரிவித்திருந்த அதிகாரிகள், 21 ஆயிரம் வீடுகளும் 73 ஆயிரம் மக்களும் மிகப்பெரும் ஆபத்தில் சிக்கியுள்ளதாக எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
குறிப்பிட்ட வேகத்தை விட அதிக வேகத்தில் புயல் கரையை கடந்திருப்பதால் பலத்த சேதங்கள் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. புளோரிடா மாகாணத்தை நோக்கி புயல் நகர்ந்த வருவதால் அங்கு அவசர நிலையை பிரகடனப்படுத்தி ஆளுநர் ரோன் டென் சாண்டிஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்