தாலுகா அலுவலகங்களுக்கு செல்லாமல் ஆன்லைன் மூலம் பட்டா மாறுதல் செய்யும் புதிய நடைமுறையை தமிழக அரசு கொண்டுவந்ததற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ஆன்லைன் மூலம் பட்டா மாறுதல் மேற்கொள்ளும் நடைமுறையை தமிழக அரசு ஏற்கெனவே கொண்டு வந்தது. ஆனாலும், ஆன்லைன் மூலம் பட்டா மாறுதல் கோரி விண்ணப்பித்தவர்கள் தாலுகா அலுவலகத்துக்கு நேரில் சென்று, ஆவணங்களின் நகல்களை அளிக்க வேண்டியிருந்தது.
இதனை எளிதாக்கும் வகையில், ஆன்லைன் மூலம் பட்டா பெறுவதற்கான புதிய நடைமுறையை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. ஒருவரது சொத்தை இன்னொருவர் கிரையம் முடிக்கும்போதே பட்டா மாறுதல் தொடர்பான பணிகளை முடிக்கும் வகையில் மென்பொருளில், சொத்து தொடர்பான பல்வேறு கேள்விகளுக்கு பதிலளிக்கவேண்டும்.
இந்த நடைமுறை முடிந்ததும் தானாகவே இணையதளத்தில் பட்டா மாறுதல் செய்யப்பட்டு பதிவேற்றம் செய்யப்படும். அதன் விவரம் கிரையம் முடித்து கொடுத்தவர் மற்றும் கிரையம் பெற்றவர்களின் கைபேசி எண்களுக்கு குறுந்தகவலாக அனுப்பப்படும். இதற்கான அரசாணையை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா பிறப்பித்துள்ளார்.