ஸ்டெர்லைட் ஆலை துவங்க அனுமதி கொடுத்ததே திமுக தான் : பியூஷ் கோயல்

ஒரு லட்சத்து எழுபதாயிரம் கோடி 2ஜி ஊழலில் குற்றம் சாட்டப்பட்ட ஆ.ராசாவுக்கும் கனிமொழிக்கும் திமுக சீட் கொடுத்துள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் விமர்சித்துள்ளார். ராமநாதபுரத்தில் அதிமுக கூட்டணி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கலந்து கொண்டார். அக்கூட்டத்தில் அவர் பேசும்போது பாம்பன் கடல் மேல் ஆயிரம் கோடி ரூபாயில் புதிய ரயில் பாலமும் மதுரையில் இருந்து தனுஷ்கோடி வரை நான்கு வழிச்சாலையும் ராமேஸ்வரத்திலிருந்து தனுஷ்கோடிக்கு புதிய ரயில் பாதையும் விரைவில் அமைக்கப்படும் என உறுதியளித்தார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஸ்டெர்லைட் ஆலையை துவங்க அனுமதி கொடுத்ததே திமுக தான் என கடுமையாக விமர்சித்தார். மேலும் ஊழல் நிறைந்த திமுக காங்கிரஸ் கூட்டணியில் 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் பட்டியலில் இடம் பெற்றுள்ள ஆ.ராசா, கனிமொழி ஆகியோருக்கு சீட் வழங்கப்பட்டுள்ளது எனக்கூறினார்.

தமிழகத்தில் அதிமுக தலைமையிலான கூட்டணி ஒரு வலிமையான கூட்டணி என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல்  தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் அதிமுக கூட்டணி சார்பில் நடந்த ஆலோசனை கூட்டத்துக்குப்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்  பிரதமர் மோடியால் மட்டுமே நாட்டிற்கு பாதுகாப்பை கொடுக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

Exit mobile version