"அதிமுக அரசு செயல்படுத்திய திட்டங்களை திமுக அரசு தொடர வேண்டும்" – உடுமலை ராதாகிருஷ்ணன்

அதிமுக ஆட்சியில், வேளாண்மை, கால்நடை, பால்வளம், மீன்வளம் ஆகிய துறைகளில் கொண்டுவரப்பட்ட பல சிறப்பான திட்டங்களை, திமுக அரசு தொடர வேண்டும் என்று, முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

சட்டப்பேரவையில், கால்நடை, பால்வளம், மீன்வளம் உள்ளிட்ட துறைகள் மீதான மானிய கோரிக்கை விவாதத்தில் பேசிய அவர்,

தெற்கு ஆசியாவிலேயே முதல் முறையாக சேலம் மாவட்டம் தலைவாசலில் ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் 564 கோடி ரூபாய் மதிப்பில் உலகத்தரம் வாய்ந்த கால்நடை பூங்கா மற்றும் ஒருங்கிணைந்த ஆராய்ச்சி நிலையம் கடந்த அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்டுதை சுட்டிக்காட்டினார்.

தமிழகத்தில் பாராம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை மீட்டெடுக்கும் வகையில் அதிமுக ஆட்சியில் ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுக்கு அரசாணை வெளியிட்டு விமர்சையாக நடத்தி சாதனை படைக்கப்பட்டதை பெருமிதத்துடன் தெரிவித்த அவர், இதனை திமுக அரசு தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

 கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் மீன்வளத் துறைக்கு 7ஆயிரத்து 200 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து சாதனை படைத்ததாக தெரிவித்த அவர், இறப்பு அல்லது காணாமல் போன மீனவர்களின் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு பணி வழங்கியதையும் தெரிவித்தார்.

 அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை மூலம் சிங்கப்பூர், ஹாங்காங், கத்தார், துபாய், உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு ஆவின்பால் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.

 அதிமுக அரசு செயல்படுத்திய பல்வேறு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி கிராமப்புற ஏழை எளிய மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.

 

 

“மேட்டூரை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்”

இதேபோல், சேலம் மாவட்டத்தை இரண்டாகப் பிரித்து மேட்டூரை தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டுமென, மேட்டூர் சட்டமன்ற உறுப்பினரான பாமகவை சேர்ந்த சதாசிவம் கோரிக்கை விடுத்துள்ளார்.

சட்டப்பேரவையில் தனது அறிமுகப் பேச்சில் இதனை வலியுறுத்திய அவர், மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி, ஓமலூர், அந்தியூர் ஆகிய ஐந்து தொகுதிகளை உள்ளடக்கி, நிர்வாக வசதிக்காக மாவட்டமாக பிரிக்க வேண்டும் என தெரிவித்தார்.

Exit mobile version