அதிமுக ஆட்சியில் தொடங்கப்பட்ட 2 ஆயிரம் அம்மா மினி கிளினிக்குகளை மூடுவதாக திமுக அரசு அறிவித்துள்ளது, மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏழை மக்களுக்கு தரமான மருத்துவ சிகிச்சை கிடைக்க, அண்ணா திமுக ஆட்சியில் அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அம்மா மினி கிளினிக் திட்டத்தை தொடங்கி வைத்தார்.
கிராமப்புறங்களில் ஆயிரத்து 400 கிளினிக்குகள், சென்னை மற்றும் இதர நகர்ப்புறங்களில் 400 கிளினிக்குகள், 200 நகரும் கிளினிக்குகள் அமைக்கப்பட்டன.
ஏழை, எளிய மக்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் அம்மா மினி கிளினிக்குகள் உடனடி செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு, பொதுமக்கள் தரமான சிகிச்சை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த நிலையில், திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து அரசியல் காழ்ப்புணர்ச்சியை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகிறது. அண்ணா திமுக அரசின் மக்கள் நலத்திட்டங்களை முடக்கி அதன் மூலம் அதிமுகவின் நற்பெயரை களங்கப்படுத்தும் நோக்கில் திமுக அரசு செயல்பட்டு வருகிறது.
அந்த வகையில், அரசியல் காழ்ப்புணர்ச்சியால் அதிமுகவின் மக்கள் நலத்திட்டங்களுக்கு திமுக அரசு மூடுவிழா நடத்துகிறது. அம்மா உணவகத்தை முடக்க நினைத்து, அதற்கான எதிர்ப்பால் திமுக அரசு பின் வாங்கிய நிலையில், தற்போது அம்மா மினி கிளினிக்குகளை மூடியுள்ளது.
இதன் மூலம் ஏழை எளிய மக்களுக்கு கிடைத்து வந்த உடனடி சிகிச்சை தடை படுவதுடன், அம்மா மினி கிளினிக்குகளின் பணியாற்றி வந்த மருத்துவர்கள், பணியாளர்கள் நிலையும் கேள்விக்குறியாகியுள்ளது.
அம்மா மினி கிளினிக்குகளை மூடி ஏழைகளின் உயிருடன் திமுக அரசு விளையாடுகிறதா..? என கேள்வி எழுப்பி உள்ள சமூக ஆர்வலர்கள், கொரோனா மூன்றாம் அலை வீசும் நிலையில், மருத்துவ கட்டமைப்பை திமுக அரசு சிதைப்பதாக குற்றம்சாட்டி உள்ளனர்.