தமிழக கேரள எல்லையில் தேர்தல் விதிமுறைகளை மீறி 30 கார்கள் புடைசூழ தென்காசி திமுக வேட்பாளர் தேர்தல் பிரசாரம் மேற்கொண்டதால் திருமங்கலம் – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
நெல்லை மாவட்டம் தென்காசி நாடாளுமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக தனுஷ்குமார் கறமிறங்கியுள்ளார். தமிழக – கேரளா எல்லையான புளியரைகோட்டை வாசல் பகுதியில் கோட்டை வாசல் கருப்பசாமி கோயிலில் சாமி தரிசனம் செய்த அவர், அங்கிருந்து வாகனத்தில் தன்னுடைய பிரசாரத்தை துவங்கினார்.
பிரசாரத்தின்போது 30க்கும் மேற்பட்ட கார்களில் நூற்றுக்கும் மேற்பட்ட திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் அவரை பின்தொடர்ந்தனர். இதனால் கோட்டைவாசலின் திருமங்கலம் – கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தொடர்ந்து புளியரை, தெற்கு மேடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் அவர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் தனது பிரசாரத்தின் முதல் நாளிலேயே அதிக வாகனங்களில் வந்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியது அப்பகுதி மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.