திருப்பூர் மாவட்டத்தின் உடுமலையில் ரஜினி நடித்த பேட்ட திரைப்படம் பார்த்த போது ஏற்பட்ட பிரச்சனையில் தாக்கப்பட்ட ரஜினி ரசிகர் பரிதாபமாக உயிரிழந்தார். பத்திரகாளியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த மணிகண்ட பிரபு பேட்ட திரைப்படம் பார்க்கச் சென்றதாக தெரிகிறது. படத்தின் பாதியிலே வந்த அவர், வீட்டிற்கு சென்று தூங்கியதாக கூறப்படுகிறது. காலை நீண்ட நேரமாகியும் மணிகண்ட பிரபு எழுந்திருக்காமல் மயக்கநிலையில் இருந்ததால், அவரை குடும்பத்தினர் மருத்துவமனையில் சேர்த்தனர்.
எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். பிரேதப் பரிசோதனை அறிக்கையில் தலையில் பலத்த காயம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து காவல்துறை நடத்திய விசாரணையில் தியேட்டரில் சிகரெட் பற்ற வைப்பதில் ஏற்பட்ட தகராறில், திருமூர்த்தி என்பவர் கட்டையால் தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து, திருமூர்த்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.