சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சனை கொலை செய்ய பயன்படுத்திய துப்பாக்கியை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் களியாக்காவிளை சோதனைச்சாவடியில் கடந்த 8-ம் தேதி பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர் வில்சன் சுட்டுக் கொல்லப்பட்டார். தமிழகம் மற்றும் கேரளாவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து இரு மாநில காவலர்களும் தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் சிசிடிவி காட்சிகளின் பதிவைக் கொண்டு அப்துல் சமீம், தௌபிக் ஆகிய இருவரை கைது செய்த காவல்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர். அவர்கள் அளித்த தகவலின் படி, கொலைக்குப் பயன்படுத்திய துப்பாக்கியை எர்ணாகுளம் பேருந்து நிலையம் அருகேயுள்ள கழிவுநீர் ஓடையில் இருந்து காவல்துறையினர் மீட்டனர். வெளிநாட்டு ரகத்தை சேர்ந்த அந்த துப்பாக்கி அவர்களிடம் எப்படி வந்தது என்பது குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.