திருச்செந்தூர் அருகிலுள்ள முக்காணி தாமிரபரணி ஆற்றங்கரையில் கிடைத்துள்ள பாண்டியர் காலக் கட்டடங்களின் சிதைவுகளை லக்னோவில் உள்ள மத்திய அரசு நிறுவன விஞ்ஞானிகள் ஆய்வுக்காக எடுத்துச் சென்றுள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள முக்காணி தாமிரபரணி ஆற்றில் கடும் வறட்சியால் நீர் வற்றியதில் பாண்டியர் காலக் கட்டடங்கள், முதுமக்கள் தாழிகள், எலும்புத் துண்டுகள், கல்லாலான நங்கூரம் ஆகியன கண்டெடுக்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து அப்பகுதி பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் தமிழர்களின் வரலாற்றுச் சான்றுகளை ஆர்வத்துடன் பார்த்துச் சென்றனர். இதனைத் தொடர்ந்து உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள மத்திய அரசின் அறிவியல் நிறுவனத்தின் காலக்கணிப்புத் துறை விஞ்ஞானிகள் பார்வையிட்டுப் பழங்கால மட்பாண்ட ஓடுகளையும் செங்கற்களின் மாதிரிகளையும் ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர். இப்பகுதியில் தொல்லியல் ஆராய்ச்சியாளர்களைக் கொண்டு முறையாக அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிகை வைத்துள்ளனர்.