கர்நாடக அணைகளில் இருந்து 50 ஆயிரம் கனஅடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்படுவதால், மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து விநாடிக்கு 30 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது.
காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கே.ஆர்.எஸ் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. பாதுகாப்பு கருதி அணைகளில் இருந்து திறந்து விடப்படும் நீரின் அளவு 50 ஆயிரம் கனஅடிக்கு மேல் அதிகரித்துள்ளது. இதனால், மேட்டூர் அணைக்கு நீர் வரத்து விநாடிக்கு 6 ஆயிரம் கனஅடியில் இருந்து 30 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது. மேலும், மேட்டூர் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், காவிரி டெல்டா விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.