தருமபுரி – மொரப்பூர் திட்டத்தால் தருமபுரி மாவட்டம் வளர்ச்சி பெறும் என்று அன்புமணி ராமதாஸ் எம்.பி. தெரிவித்தார். இத்திட்டத்திற்கு முந்தைய திமுக அரசு நிதி ஒதுக்காமல் தாமதித்ததாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
358 கோடி ரூபாய் மதிப்பில் தருமபுரி – மொரப்பூர் இடையே ரயில் பாதை அமைக்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சி தருமபுரி மாவட்டம் வள்ளலார் திடலில் நடைபெற்றது. மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நிகழ்ச்சியில் பங்கேற்று திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார். சென்னை எழும்பூர்- கொல்லம் இடையேயான விரைவு ரயில் சேவையையும் காணொலி காட்சி மூலம் கொடியசைத்து அவர் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அன்புமணி ராமதாஸ், மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியுள்ளதாக தெரிவித்தார். மேலும், இந்த திட்டத்திற்கு முந்தைய திமுக அரசு நிதி ஒதுக்காமல் கிடப்பில் போட்டதாகவும் குற்றம் சாட்டினார். இத்திட்டத்தின் மூலம் தருமபுரி மாவட்டம் வளர்ச்சி பெறும் என்றும் குறிப்பிட்டார். தமிழக அமைச்சர்கள் தங்கமணி, அன்பழகன் உட்பட பலர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.