ஐ.பி.எல். தொடக்க ஆட்டத்தின் டிக்கெட் வருமானத்தை புல்வாமா தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ஐ.பி.எல். கிரிக்கெட் திருவிழா வரும் 23 ஆம் தேதி சென்னையில் தொடங்க உள்ளது. புல்வாமா தாக்குதலில் பலியான ராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக தொடக்கவிழா ரத்து செய்யப்படுவதாக ஐபிஎல் நிர்வாகம் ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்நிலையில், வருகிற 23-ந்தேதி தொடக்க ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ்- பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் மோதுகின்றன.
இந்த போட்டிக்கான டிக்கெட்டுகள் ஒரு மணி நேரத்தில் விற்று தீர்ந்த நிலையில் ஐ.பி.எல். முதலாவது ஆட்டத்தின் டிக்கெட் மூலம் கிடைக்கும் வருமானத்தை காஷ்மீரின் புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குடும்பத்துக்கு வழங்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோனி, ராணுவத்தில் கவுரவ பொறுப்பு வகிப்பதால், காசோலையை அவர் வழங்குவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.