உலகின் அதிக வெப்பநிலை காணப்படும் Badwater Basin, நகரும் பாறைகள் என பல்வேறு அதிசயங்களை தன்னகத்தே கொண்ட டெத் பள்ளத்தாக்கு குறித்து இன்றைய உல்லாச உலகம் பகுதியில் காணலாம்.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள மிகவும் தாழ்வான பகுதிதான் டெத் பள்ளத்தாக்கு. பல்வேறு அதிசயங்களை தன்னகத்தே கொண்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கிறது. கடல் மட்டத்திலிருந்து 282 மீட்டர் தாழ்வாக உள்ள Badwater Basin என அழைக்கப்படும் பகுதி முழுவதும் வெண்மைத் திட்டுகளாக காணப்படுகிறது. பெரும்பாலான சுற்றுலாப் பயணிகள் இதனை பனித்திட்டுக்கள் என்று கருதுகிறார்கள். ஆனால் இது தாது உப்புக்காளால் உருவான அடுக்கு என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். கடும் வெப்பத்தின் காரணமாக பாறைகளிலிருந்து உருகும் தாதுப் பொருட்கள் திட்டுக்களாக படிந்துள்ளன. வட அமெரிக்காவில் கடும் புயல் வீசும் போது பெய்யும் மழையால் இப்பகுதியில், ஏரி போன்று நீர் தேங்குகிறது. கடும் வெப்பத்தினால் நீர் ஆவியாவதால் தாதுப் பொருட்கள் பூமியிலேயே தங்கி விடுகின்றன. ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தொடர்ந்து இதுபோன்று தொடந்து நடைபெற்ற நிகழ்வினால் வெண்மை நிற தாது படிமங்கள் உருவாகின.
இப்பகுதிகளில் பகலில் சராசரி வெப்பநிலை 53 டிகிரி செல்சியசாகவும் இரவில் சராசரி வெப்பநிலை 42 டிகிரி செல்சியசாகவும் உள்ளது. இந்த வெப்பநிலையில் முட்டையை வைத்து அடுப்பில்லாமலேயே சமையல் செய்ய முடியும். இவ்வளவு அதிகமான வெப்பம் சுற்றுலாப் பயணிகளுக்கு மிகவும் ஆபத்தானது. இதனால் இப்பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் தனியாக செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. குறிப்பிட்ட எண்ணிக்கையில் கூட்டம் கூட்டமாகவே சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.
இத்தகைய அதிகமான வெப்பத்தையும் தாக்குப் பிடித்து அங்கு பருவ காலங்கள் பூக்கள் பூக்கின்றன. சிதோஷ்ண நிலை சரியாக இருக்கும் போது அங்கு மஞ்சள், ஊதா, இளஞ்சிவப்பு நிற பூக்கள் ஒட்டுமொத்த பள்ளத்தாக்கையே மூடி காட்சியளிக்கின்றன. தேனீக்கள், வண்ணத்துப் பூச்சிகள், சிறிய பறவைகள் இந்த மலர்களைத் தேடி படையெடுப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்
டெத் பள்ளத்தாக்கின் ரேஸ்டிரக் பிளேயாவில் தானாக நகரும் கற்கள் உலக அதிசியங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. இடமிருந்து வலமாகவும், வலமிருந்து இடமாகவும் கற்கள் தானாகவே நகர்வது இன்றும் புதிரான விஷயமாக இருந்தடுஹ். 13 கிலோ முதல் 300 கிலோ எடை வரை உள்ள கற்கள் கூட நகர்கின்றன.நீண்ட காலமாக மர்மமாக இருந்த கற்கள் நகர்வுக்கான காரணத்தை தற்போது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இப்பகுதிகளில் எப்போதாவது பெய்யும் மழைநீர் பனிக்கட்டியாக மாறி பாறைகளை நகர்த்துவதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். நம்ப முடியாத பல அதிசியங்களை தன்னகத்தே கொண்டுள்ள டெத் பள்ளத்தாக்கு விஞ்ஞானிகளுக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு சொர்க்கபுரியாக திகழ்கிறது.