கேரளாவில் கன மழை பெய்து பலத்த சேதத்தை ஏற்படுத்திய அதே சமயத்தில் கர்நாடக மாநிலம் குடகு பகுதியிலும் கன மழையால் பாதிப்பு ஏற்பட்டது. அங்கும் நிலச்சரிவு ஏற்பட்டு ஏராளமானோர் இறந்தார்கள்.
மடிகேரி அருகே ஜோடுபாலா பகுதியில் நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர். அவர்களில் 3 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுவிட்டன. ஆனால் கல்லூரி மாணவியான மஞ்சுளா என்பவரின் உடல் மட்டும் கிடைக்கவில்லை. அவருடைய உடலை தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், ராணுவ வீரர்கள், தீவிரமாக தேடிய போதும் உடலை கண்டுபிடிக்க முடியவில்லை.மஞ்சுளாவின் முகத்தை கடைசியாக ஒரு முறை பார்க்க முடியவில்லையே என்று உறவினர்கள் வேதனை அடைந்தனர்.
இந்த நிலையில், மஞ்சுளாவின் உருவ பொம்மையை உருவாக்கி இறுதி சடங்கு நடத்தலாம் என்று முடிவாந்து. இதையடுத்து உருவ பொம்மை தயாரானது. மஞ்சுளாவின் உடைகள் அந்த உருவ பொம்மைக்கு அணிவிக்கப்பட்டது. இதில் மஞ்சுளாவின் உறவினர்கள், தோழிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டு மஞ்சுளாவின் உருவ பொம்மைக்கு அஞ்சலி செலுத்தினர்.பின்னர் மஞ்சுளா மாயமான இடத்தில் அந்த உருவ பொம்மை அடக்கம் செய்யப்பட்டது.