பாரம்பரிய நெல் ரகங்களை விவசாயிகளிடையே பிரபலப்படுத்தி, அதன் உற்பத்தியை ஊக்கப்படுத்திய நெல் ஜெயராமனின் மறைவு தமிழ்நாட்டிற்கும் வேளாண்மைத் துறைக்கும் பேரிழப்பாகும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
பாரம்பரிய நெல் ரகங்களை விவசாயிகளிடையே பிரபலப்படுத்தி, அதன் உற்பத்தியை ஊக்கப்படுத்திய நெல் ஜெயராமனின் மறைவு தமிழ்நாட்டிற்கும் வேளாண்மைத் துறைக்கும் பேரிழப்பாகும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாக்கும் அரும்பணியை ஆற்றிய நெல் ஜெயராமன் காலமான செய்தியை கேட்டு மிகுந்த வேதனை அடைந்ததாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
நமது நெல்லை காப்போம் என்ற இயக்கத்தின் மூலம் மாப்பிள்ளை சம்பா, ராஜமன்னார், கவுனி போன்ற 174 பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்து பிரபலப்படுத்தியவர் நெல் ஜெயராமன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆயிரக்கணக்கான வேளாண் மக்களை பாரம்பரிய நெல் விவசாயத்தில் ஈடுபடுத்தி, தமிழ்நாட்டில் பாரம்பரிய நெல் உற்பத்தியை உயர்த்திய பெருமைக்குரியவர் ஜெயராமன் என்றும் அவர் கூறியுள்ளார்.
பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாப்பதில் அவர் ஆற்றிய சேவையை பாராட்டும் வகையில் அவருக்கு கடந்த 14ஆம் தேதி 5 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்க, தான் உத்தரவிட்டதையும் முதலமைச்சர் சுட்டிக்காட்டி உள்ளார்.
ஜெயராமனின் மறைவு தமிழ்நாட்டிற்கும் வேளாண்மைத் துறைக்கும் பேரிழப்பாகும் என்று கூறியுள்ள முதலமைச்சர், அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர் மற்றும் வேளாண் மக்களுக்கு அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.