கஜகஸ்தானில் கொரோனாவை விட கொடிய வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது!

கொரோனாவை காட்டிலும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் புதிய வைரஸ் ஒன்று, கஜகஸ்தான் நாட்டில் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த செய்தித்தொகுப்பை காணலாம்…

உலகம் முழுவதும் அசுர வேகத்தில் பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்தவே இதுவரை வழிமுறை கண்டுபிடிக்கப்படாத சூழலில், ஜி4 வைரஸ், பிளேக் நோய் ஆகியவையும் பரவ தொடங்கியுள்ளதாக அண்மையில் செய்திகள் வெளியாகின. தற்போது இந்த பட்டியலில் புது வைரஸ் ஒன்றும் இணைந்துள்ளது.

கஜகஸ்தான் நாட்டில் இந்த வைரசால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா வைரசை காட்டிலும், அதிக பாதிப்புகளையும், உயிரிழப்புகளையும் இந்த வைரஸ் ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. நுரையீரல் சார்ந்த பாதிப்புகளை ஏற்படுத்தும் இந்த வைரஸ் குறித்து, கஜகஸ்தான் நாட்டில் உள்ள சீன தூதரகமும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த வைரஸ் தொடர்பாக அந்நாட்டின் சுகாதாரத்துறை தொடர்ந்து ஆய்வு நடத்தி வருவதாகவும், ஆனால் இதுவரை குறிப்பிடத்தக்க எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை எனவும் சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

கஜகஸ்தானில் கடந்த 6 மாதங்களில் இந்த வைரசால் 1,772 பேர் உயிரிழந்துள்ளதாகவும், குறிப்பாக கடந்த மாதம் மட்டும் 628 பேர் பலியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீன குடிமக்களும் இந்த வைரசால் உயிரிழந்ததாக சீன தூதரகம் குறிப்பிட்டுள்ளது.

ஆனால், இது ஒரு சாதாரண நிமோனியா பாதிப்புதான் என கஜகஸ்தான் அதிகாரிகள் தெரிவிப்பதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கஜகஸ்தானில் நுரையீரல் அலர்ஜியால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையை விட 2 முதல் 3 மடங்கு அதிகம் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த புது வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த முழு விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என கஜகஸ்தான் அரசு தெரிவித்துள்ளது. மேலும், வைரஸ் குறித்த ஆய்வுகளையும் அந்நாடு தீவிரப்படுத்தியுள்ளது. இதனிடையே, புது வைரஸின் அபாயம் குறித்த சீனத் தூதரகத்தின் எச்சரிக்கை தொடர்பான கேள்விக்கு, கஜகஸ்தான் வெளியுறவுத்துறை பதிலளிக்க மறுத்துவிட்டது.

Exit mobile version