அணை பாதுகாப்பு மசோதாவை சட்டமாக்கக் கூடாது – முதலமைச்சர் பழனிசாமி பிரதமருக்கு கடிதம்

அணை பாதுகாப்பு மசோதாவை சட்டமாக்கக் கூடாது என வலியுறுத்தி, பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் எழுதியுள்ள கடிதத்தில், அணை பாதுகாப்பு மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் அணைகளுக்கான உரிமைகள் பறிபோகும் எனக் கூறியுள்ளார். இதனால் அந்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் எனவும் அவர் கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். மேலும் அணை பாதுகாப்பு நிறைவேற்றப்பட்டால், ஒரு மாநிலத்திற்கு சொந்தமான அணை மற்றொரு மாநிலத்தில் அமைந்திருந்தால், அணைக்கு சொந்தமான மாநிலம் எந்தவித உரிமையும் கொண்டாட முடியாது எனவும், எனவே அணை பாதுகாப்பு மசோதாவை நிறைவேற்றக்கூடாது எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேபோல் தமிழகத்தில் முல்லை பெரியார் அணை, பரம்பிக்குளம் மற்றும் துணக்கடவு உள்ளிட்ட அணைகள் தமிழகத்திற்கு உரிமையானதாக இருந்தாலும் அவைகள் அண்டை மாநிலத்தில் உள்ளதால் அவற்றின் மீது உரிமை கொள்ள முடியாத சூழ்நிலை  ஏற்படும் எனவும் அவர் கூறியுள்ளார். இதன்மூலம் தமிழ்நாட்டின் உரிமைகள் பறிக்கப்படுவதாகவும் முதலமைச்சர் கடிதத்தில் தெரிவித்துள்ளார். இந்த விவகாரத்தில் நல்ல தகவலை மத்திய அரசிடமிருந்து எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Exit mobile version