இந்தியாவில் முதல்முறையாக கொரோனா தொற்று தினசரி பாதிப்பு ஒரு லட்சத்தை கடந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா பரவலை தடுப்பதற்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கில், படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. மேலும், கோவாக்சின், கோவிஷீல்டு போன்ற தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வரும் நிலையில், கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இது தொடர்பாக பிரதமர் மோடி உயர்மட்டக் குழுவினருடன் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். இந்த நிலையில், முதன்முறையாக கடந்த 24 மணி நேரத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 558 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. நேற்று ஒரே நாளில், 478 பேர் பலியாகியுள்ளனர். அதிகபட்சமாக, மகாராஷ்டிராவில் மட்டும் 57 ஆயிரம் பேருக்கு பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதற்கு முன்பு, கடந்த ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி, அதிகபட்ச ஒருநாள் பாதிப்பு 97 ஆயிரத்து 894 ஆக பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.