நீதிமன்றம் உத்தரவிட்டும் சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய ரன்வீர்ஷா, பாஸ்போர்ட்டை ஒப்படைக்கவில்லை என்று உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
சிலை கடத்தல் வழக்குகளில் தொடர்புடைய தொழில் அதிபர் ரன்வீர்ஷா மற்றும் கிரண்ராவ் ஆகியோர், முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஆஜரான அரசு குற்றவியல் தலைமை வழக்கறிஞர் நடராஜன், ரன்வீர்ஷாவின் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டும், இதுவரை அவர் தன்னுடைய பாஸ்போர்ட்டை விசாரணை அதிகாரியிடம் ஒப்படைக்கவில்லை என தெரிவித்தார்.
இதனையடுத்து மனுதாரர்கள் பாஸ்போர்ட்டை ஏன் ஒப்படைக்க கூடாது என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் பாஸ்போர்ட்டை ஒப்படைப்பது தொடர்பாக மனுதாரர்கள் கருத்தை அறிந்து ஒரு வாரத்தில் தெரிவிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்.