இந்தியா, பாகிஸ்தான் இடையே கடந்த சில நாட்களாக ராணுவத்தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றது. கடந்த 14ம் தேதி புல்வாமாவில் இந்திய பாதுகாப்பு படையினர் மீது நடைபெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட வீரர்கள் வீரமரணமடைந்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவத்தினர் கடந்த பிப்ரவரி 26ம் தேதி அதிகாலை 3.30 மணியளவில் பாகிஸ்தான் எல்லைக்குள்ளேயே நுழைந்து பயங்கரவாத முகாம்கள் மீது குண்டு மழை பொழிந்தனர். இந்த தாக்குதலின் போது மிராஜ் ரகத்தை சார்ந்த போர் விமானம் இந்திய விமானப்படையால் பயன்படுத்தத்தப்பட்டது.
இந்நிலையில் இந்த போர் தாக்குதலில் ஈடுபட்ட விமானப்படை வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ராஜஸ்தானைச் சேர்ந்த தம்பதியினர் தங்களது குழந்தைக்கு “மிராஜ்” என்று பெயர் சூட்டியுள்ளனர். ராஜஸ்தான் மாநிலத்தைச் சோ்ந்தவா் மகாவீா் சிங் ரத்தோர். இவருக்கு கடந்த பிப்ரவரி 26ம் தேதி அதிகாலை 5 மணியளவில் அறுவை சிகிச்சை உதவியோடு ஆண் குழந்தை பிறந்துள்ளது. அன்றைய தினம் தான் பாகிஸ்தான் மீது இந்தியா சர்ஜிக்கல் தாக்குதலை தொடுத்தது.
இந்தியா விமானப்படை வீரர்களின் வீரத்தை பாராட்டும் வகையிலும், அவா்களுக்கு பொதுமக்கள் சார்பில் மரியாதை செலுத்தும் விதமாகவும் எனது குழந்தைக்கு “மிராஜ்” என்று பெயா் சூட்டினோம் என்று மகாவீா் சிங் ரத்தோர் கூறியுள்ளார்.