அடுத்த சில ஆண்டுகளுக்கு 8 சதவீத பொருளாதார வளர்ச்சி என்பது நாட்டிற்கு அவசியமாகியுள்ளதாக ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரங்கராஜன் தெரிவித்துள்ளார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும் இந்திய அளவை பொருளாதாரக் கழகத்தின் மாநாட்டில் ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் சி. ரங்கராஜன் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், பொருளாதார வளர்ச்சி விகிதத்தைப் பொருத்தே நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான காலநிர்ணயத்தை வகுக்க முடியும் என்று கூறினார். இன்னும் 8 ஆண்டுகளில் 5 டிரில்லியன் டாலர் அளவுக்கு நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டுமென்றும், நடுத்தர வருமானம் உடையவர்கள் மிகுந்த நாடாக இந்தியா இருக்கும் நிலையில், பொருளாதார வளர்ச்சியில் உயருவதற்கு இன்னும் 20-லிருந்து 22 ஆண்டுகள் ஆகும் என புள்ளி விவரங்கள் தெரிவிப்பதாக கூறியுள்ளார். மேலும், அடுத்த சில ஆண்டுகளுக்கு நாட்டின் பொருளாதாரம் 8 சதவீத வளர்ச்சியில் தொடருவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டியது அவசியமாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.