542 மக்களவை தொகுதிகளுக்கு இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை துவக்கம்

நாடுமுழுவதும் 7 கட்டங்களாக நடத்தப்பட்ட தேர்தலின் வாக்குகள் இன்று எண்ணப்பட்டு, முடிவுகள் வெளியாகவுள்ளன. 

நாடுமுழுவதும் 542 மக்களவை தொகுதிக்கு கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி முதல், இம்மாதம் 19ஆம் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. அதேபோல் ஆந்திரா, அருணாச்சலப் பிரதேசம், ஒடிசா, சிக்கிம் ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தலுக்கும், தமிழகத்தில் நடத்தப்பட்ட 22 சட்டப்பேரவை இடைத்தேர்தல்களுக்கான வாக்குகளும் இன்று எண்ணப்பட உள்ளன. நாடுமுழுவதும் உள்ள 90 கோடியே 99 லட்சம் வாக்காளர்களில் 67 புள்ளி 11 சதவீதம் பேர் வாக்களித்துள்ளனர். இந்நிலையில் சரியாக இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. இதையொட்டி முதலில் தபால் வாக்குகளும், பின் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் அடுத்தடுத்து 14 மேஜைகளில் வைக்கப்பட்டு எண்ணப்படுகின்றன.

இதையடுத்து முறைகேடுகளைத் தவிர்க்க ஒரு சட்டப்பேரவை தொகுதிக்கு ஏதேச்சையாக தேர்ந்தெடுக்கப்படும் 5 ஒப்புகைச்சீட்டு இயந்திரங்கள் சரிபார்க்கப்படுகின்றன. இதன்பின்னரே தொகுதியின் வெற்றிவேட்பாளர் தேர்தல் நடத்தும் அதிகாரிகளால் அறிவிக்கப்படுவார். இதனால் தேர்தல் முடிவுகள் வெளியாவதில் 6 மணிநேரம் காலதாமதம் ஆகலாம் எனக்கூறப்படுகிறது. இந்த தேர்தல் வாக்கு எண்ணும் பணிகளை ஒட்டி, நாடுமுழுவதும் போலீசார் மற்றும் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, வாக்கு எண்ணும் மையங்கள் முழு கட்டுப்பாட்டு வளையத்துக்குள் வந்துள்ளன.

Exit mobile version