தமிழைவிட சமஸ்கிருதம் தொன்மையான மொழி என 12ம் வகுப்பு பாட புத்தகத்தில் இடம்பெற்ற விவகாரம் தொடர்பாக பாட புத்தகம் தயாரிப்பு குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், சர்ச்சைக்குரிய பகுதி நீக்கப்படும் என்றும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. 12ஆம் வகுப்பு ஆங்கில பாடப் புத்தகத்தில் 142ம் பக்கத்தில் மொழிகள் பற்றிய ஒரு பாடப்பிரிவு இடம்பெற்று உள்ளது. அதில் தமிழ் கி.மு.300 ஆண்டுகள் தொன்மையானது என்றும், அதைவிட சமஸ்கிருதம் கி.மு. 2 ஆயிரம் ஆண்டுகள் தொன்மையானது என்றும் சர்ச்சைக்குரிய கருத்து பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த பதிவுக்கு தமிழ் ஆர்வலர்கள், கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதையடுத்து சமஸ்கிருதத்துக்கு முக்கியத்தும் கொடுக்கும் தவறான பாடப்பகுதி நீக்கப்படும் என்று தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்து இருந்தார். இந்தநிலையில், 12ம் வகுப்பு ஆங்கில பாட புத்தகம் தயாரிப்பு குழுவினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது. மேலும், புத்தகத்தில் உள்ள சர்ச்சைக்குரிய பகுதியும் நீக்கப்படும் எனவும் பள்ளி கல்வித்துறை கூறியுள்ளது.