தமிழகத்தில் வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது

தமிழகத்தில் மக்களவை மற்றும் இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுத்தாக்கல் முடிவடைந்துள்ளது. மொத்தம் ஆயிரத்து 271 பேர் மனுத்தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது. நாடு முழுவதும் 17வது நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் ஏப்ரல் 11 முதல் 7 கட்டங்களாக நடைபெறுகிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரே கட்டமாக 18ம் தேதி நடைபெறுகிறது. மேலும் தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் நடைபெறவுள்ளது.

நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் கடந்த 19ம் தேதி துவங்கிய நிலையில், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் ஆர்வத்துடன் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தனர். நேற்றுடன் வேட்புமனுத் தாக்கல் முடிவடைந்த நிலையில், தமிழகத்தில் மக்களவை தேர்தலையொட்டி வேட்புமனுக்களை ஆயிரத்து 271 பேர் தாக்கல் செய்துள்ளனர்.

வேட்புமனுக்களை ஆண் வேட்பாளர்கள் ஆயிரத்து 132 பேரும் பெண் வேட்பாளர்கள் 137 பேரும் மூன்றாம் பாலினத்தவர் 2 பேரும் தாக்கல் செய்துள்ளனர்.

அதிகபட்சமாக தூத்துக்குடியில் 62 வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இதேபோல தென்காசியில் குறைந்தபட்சமாக 12 பேர் மட்டுமே வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இடைத்தேர்தல் நடைபெறவுள்ள சட்டப்பேரவை தொகுதிகளில் மொத்தம் 492 பேர் தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். இதில் ஆண் வேட்பாளர்கள் 415, பெண் வேட்பாளர்கள் 77 பேர் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக பெரம்பூர் தொகுதியில் 68 பேர் மனுத் தாக்கல் செய்துள்ளனர். குறைந்தபட்சமாக மானாமதுரையில் 9 பேர் மட்டுமே மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

இதனிடையே வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது. அந்தந்த தொகுதிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள பொதுப் பார்வையாளர்கள் முன்னிலையில் இந்த வேட்புமனுக்கள் பரிசீலனை நடக்கிறது. மேலும் மனுக்களை வாபஸ் பெற விரும்புபவர்கள் நாளை மறுநாள் மாலை 3 மணிக்குள் பெற்றுக் கொள்ளலாம். அன்று மாலையே இறுதி வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்படும் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version