இந்திய விமானப்படை பலம் பொருந்தியதாக மாறுவதை காங்கிரஸ் கட்சி விரும்பவில்லை என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார். மக்களவையில், குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில், பிரதமர் மோடி பதிலத்து பேசினார். அப்போது, தங்கள் அரசு நேர்மையாகவும் வெளிப்படையாகவும் செயல்படுவதாக தெரிவித்த அவர், இந்திய மக்களுக்கு பதில் கூற கடமைப்பட்டவர்கள் தாங்கள் என தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தல் விரைவில் வரவுள்ளதால் எதிர்க்கட்சிகள் அரசை விமர்சிப்பதாகவும், ஆதாரமில்லாத குற்றச்சாட்டுகளை தெரிவிப்பதாகவும் பிரதமர் மோடி வேதனை தெரிவித்தார்.
மாநிலத்தின் ஆட்சியை கலைக்கும் அரசியலமைப்பு சட்டம் 356ஐ காங்கிரஸ் கட்சி பலமுறை தவறாக பயன்படுத்தியுள்ளதாக குறிப்பிட்ட அவர், தேர்தல் வாக்குறுதியை காங்கிரஸ் கட்சி நிறைவேற்றியதில்லை என்றும் குற்றம் சாட்டினார். காங்கிரஸ் ஆட்சியின்போது அனைத்து ஒப்பந்தங்களும் தரகர்கள் முன்னிலையில் நடைபெற்றதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும், இந்திய விமானப் படை பலம் பொருந்தியதாக மாறுவதை காங்கிரஸ் கட்சி விரும்பவில்லை என்றும் அவர் விமர்சித்தார்.