காங்கிரஸ் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை பொய் மற்றும் போலித்தனங்கள் நிறைந்தது என்று பிரதமர் மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
அருணாச்சலப் பிரதேசத்தில் வரும் 11ம் தேதி நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. இதையொட்டி கிழக்கு சைங் மாவட்டத்தில் உள்ள பசிகாட் என்ற இடத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, வடகிழக்கு மாநிலங்களை மத்தியில் ஆட்சியில் இருந்த போது காங்கிரஸ் புறக்கணித்ததாக குற்றம் சாட்டினார்.
வாஜ்பாய் ஆட்சி காலத்தில் தான் வடகிழக்கு மாநிலங்களுக்காக தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டது என்றும், இணைப்பு, வளம், ஆகியவையே பாஜகவின் தொலைநோக்கு பார்வை என்றும் பிரதமர் தெரிவித்தார். உள்கட்டமைப்பு வசதிகளை பாஜக அரசு மேம்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.
காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை பொய் மற்றும் போலித்தனங்கள் நிறைந்தது என்று விமர்சித்தார். கண்ணியத்திற்கும் ஊழலுக்கும் இடையில் நடைபெறும் தேர்தல் இது என்றும் அவர் தெரிவித்தார். அருணாச்சல பிரதேசத்தின் பாதுகாப்பு, வளர்ச்சியை உறுதி செய்யும் வகையில், மத்தியில் ஜனநாயக கூட்டணி ஆட்சி மீண்டும் அமைவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.