நேற்று முதல் அமலுக்கு வந்த குடியுரிமை திருத்தச் சட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டம் வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வந்துவிட்டதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், ‘குடியுரிமை திருத்தச் சட்டத்தின்கீழ் பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தானில் இருந்து வந்துள்ள முஸ்லிம் அல்லாத பிற மதத்தினர் இந்தியக் குடியுரிமை பெறலாம் என்றும், இது ஜனவரி 10-ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள அண்டை நாடுகளில் மத ரீதியில் துன்புறுத்தலுக்கு உள்ளான சிறுபான்மையினருக்கு சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற நோக்கிலேயே, இந்தச் சட்டத் திருத்தம் கொண்டுவரப்பட்டதாக மத்திய அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, கடந்த டிசம்பர் 4-ஆம் தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதன் பிறகு டிசம்பர்-9-ஆம் தேதி மக்களவையில் இந்த மசோதா நிறைவேறியது. அதைத் தொடர்ந்து டிசம்பர்11-ஆம் தேதி மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேறியது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மசோதா நிறைவேறியதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவர் அதற்கு ஒப்புதல் அளித்தார்.

Exit mobile version