வாக்காளர்களுக்கு முதலமைச்சர் கோரிக்கை

அரசின் சாதனைகள் தொடர வரும் 19ம் தேதி நடைபெறவுள்ள நான்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற செய்யுமாறு வாக்காளர்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

வரும் 19ம் தேதி சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் மற்றும் ஒட்டப்பிடாரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், தமிழகத்தில் அதிமுக ஆட்சியின் சாதனைகள் தொடர, இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று முதலமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்று தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காகவே வாழ்ந்து மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா வழியில் தமிழகத்தில் நல்லாட்சி நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ளார்.

87 ஆயிரத்து 205 மகளிருக்கு 193.63 கோடி ரூபாய் செலவில் மானிய விலையில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கப்பட்டுள்ளதாகவும், நடப்பாண்டில் மேலும் ஒரு லட்சம் மகளிருக்கு 252.50 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

பெண்களுக்கு உதவ இலவச தொலைபேசி சேவை எண் 181 அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மாநிலத்தின் அனைத்து நகரங்கள், கிராமங்களுக்கு அரசு போக்குவரத்து கழகங்கள் சேவை வழங்குவதை சுட்டிக் காட்டியுள்ள முதலமைச்சர், அவற்றை தொலைதூர வழித்தடங்களுடன் இணைக்கவும் செய்வதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் ஆயிரத்து 955 புதிய பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை, சமூக நலத்துறை, மீன்வளத்துறை, செய்தித்துறை உள்ளிட்ட துறைகளில் அதிமுக அரசின் சாதனைகளை பட்டியலிட்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மக்கள் நலத்திட்டங்கள் தமிழகத்தில் தொடர, இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று வாக்காளர்களை கேட்டுக் கொண்டுள்ளார்.

Exit mobile version