தை திருநாளை சிறப்பாக கொண்டாடும் நோக்கில், 2 ஆயிரத்து 500 ரூபாய் ரொக்கத்துடன் பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை தடுக்க ஸ்டாலின் சூழ்ச்சி செய்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை தொடங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆட்டையாம்பட்டி பகுதியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு திரண்டிருந்த பொதுமக்களிடையே பேசிய முதலமைச்சர், பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் நோக்கில் 2 ஆயிரத்து 500 ரூபாயுடன் சிறப்பு தொகுப்பு வழங்கப்படுவதாக தெரிவித்தார். ஆனால் இத்திட்டம் நிறைவேறினால் அதிமுக அரசுக்கு நற்பெயர் கிடைத்துவிடும் என்பதால் இத்திட்டதை தடுத்து நிறுத்த ஸ்டாலின் சூழ்ச்சி செய்வதாகவும் குற்றம்சாட்டினார்.
புரட்சி தலைவர் எம்ஜிஆர், புரட்சி தலைவி ஜெயலலிதா ஆகியோர் வழியில் நல்லாட்சி புரிவதாக தெரிவித்த முதலமைச்சர், நாமக்கல் மாவட்ட மக்களின் அன்பை அதிமுக அரசு பெற்றுள்ளதாக கூறினார். ஏழை எளிய, ஒடுக்கப்பட்ட கடைக்கோடி மக்களுக்கு நன்மை செய்யும் ஒரே அரசு அதிமுக அரசு என்றும் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
தொடர்ந்து, நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பிரசார சுற்றுப்பயணத்தை தொடங்கிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வழிநெடுகிலும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திறந்த வேனில் சென்ற முதலமைச்சருக்கு, சாலையின் இருபுறமும் திரண்டிருந்த தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் எழுச்சிமிகு வரவேற்பு அளித்தனர்.
அதனைதொடர்ந்து, நாமக்கல் ஆஞ்சநேயர் கோயிலில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சாமி தரிசனம் செய்தார். அப்போது முதலமைச்சருக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. முதலமைச்சருடன் அமைச்சர்கள் தங்கமணி, சரோஜா, எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து கோயில் வளாகத்தில் உள்ள சிறு வணிகர்களுடன் முதலமைச்சர் கலந்துரையாடினார். அப்போது பேசிய முதலமைச்சர், திமுக ஆட்சியில் சாலையோர வியாபாரிகள் பல இன்னல்களை அனுபவித்தை சுட்டிக்காட்டினார். சாலையோர வியாபாரிகளுக்கு பாதுகாப்பு அரணாக அதிமுக அரசு என்றும் விளங்கி வருவதாகவும் முதலமைச்சர் தெரிவித்தார்.