சென்னையில் மழையால் பாதிப்புக்குள்ளான பகுதிகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று ஆய்வு செய்தார்.
நிவர் புயல் தாக்கத்தினால் சென்னையில் ஏற்பட்டுள்ள புயல் பாதிப்புகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டார். முதலாவதாக பள்ளிக்கரணை சதுப்பு நில பகுதியில் ஏற்பட்ட பாதிப்புகளையும், சீரமைப்பு பணிகளையும் முதலமைச்சர் பார்வையிட்டார். அப்பகுதியில் சூழ்ந்துள்ள மழைநீரை வெளியேற்ற எடுக்கபட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார். வடிகால் செல்லும் பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, குடியிருப்புகளில் மழைநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டார். அப்போது உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி, வருவாய்த்துறை அமைச்சர் உதயகுமார், தலைமை செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர், அரசுத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பள்ளிக்கரணையை தொடர்ந்து ஒக்கியமேடு மடுவில் முதலமைச்சர் பார்வையிட்டார். சதுப்பு நிலத்தில் தேங்கியுள்ள மழைநீர் கடலில் சென்று கலக்கும் பாதையாக ஒக்கியமேடு மடு உள்ளது. எனவே மழைநீர் செல்லும் மடு பாதையை தூர்வாரி அகலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை நேரில் பார்வையிட்ட முதலமைச்சர், பணிகளை விரைந்து செயல்படுத்துமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஒக்கியமேடு மடு பகுதியை பார்வையிட்ட முதலமைச்சர் அதனைதொடர்ந்து முட்டுக்காடு முகத்துவாரத்தில் ஆய்வு மேற்கொண்டார். சென்னையின் புறநகர் பகுதிகளில் இருந்து வெளியேறும் மழைநீர், முட்டுக்காடு முகத்துவாரம் வழியே கடலில் கலக்கிறது. எனவே முகத்துவாரத்தில் நடைபெறும் சீரமைப்பு மற்றும் ஆழப்படுத்தும் பணிகள் தொடர்பாக அதிகாரிகளிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர், செம்மஞ்சேரி, பெரும்பாக்கம் பகுதிகளில் கால்வாய் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.