நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் உற்பத்தி செய்யும் திறன் கொண்ட, கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு குடிநீர் வழங்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒருபகுதியாக காஞ்சிபுரம் மாவட்டம் நெம்மேலியில் ஏற்கனவே உள்ள கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்துக்கு சொந்தமான 17 ஏக்கர் காலி நிலத்தில், ஆயிரத்து 260 கோடி ரூபாய் மதிப்பில் மேலும் ஒரு கடல் நீரை குடிநீராக்கும் நிலையம் அமைகிறது.
இந்த ஆலைக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதற்காக வருகை தந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, விழா மேடையில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் உருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அவரைத் தொடர்ந்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார், பெஞ்சமின் ஆகியோர் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்திற்கு பூமி பூஜை நடைபெற்றது. இதில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, புதிய நிலையத்திற்கு அடிக்கல் நாட்டி வைத்தார்.
இதைத்தொடர்ந்து, ஏற்கனவே செயல்பட்டு வரும் கடல் நீரை குடிநீராக்கும் நிலையத்தை முதலமைச்சர், துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் ஆய்வு செய்தனர். அப்போது நிலையத்தின் செயல்பாடுகள் குறித்து முதலமைச்சர் கேட்டறிந்தார். புதிதாக அமைய உள்ள நிலையம் மூலம், நாளொன்றுக்கு 150 மில்லியன் லிட்டர் கடல் நீர் சுத்திகரிக்கப்பட உள்ளது. இதன் மூலம், தென் சென்னை பகுதிகளான வேளச்சேரி, ஆலந்தூர், மேடவாக்கம், கோவிலம்பாக்கம், நன்மங்கலம், சோழிங்கநல்லூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 9 லட்சம் மக்கள் பயனடைகின்றனர்.
இந்நிலையில், ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் குடிநீர் கொண்டு வரும் திட்டம், 2 வாரத்திற்குள் செயல்படுத்தப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த முடியும் என்பதை அரசு ஆய்வு செய்து வருவதாகவும், இனி புதிய தொழிற்சாலைகள் தொடங்கவும், அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டவும், நீரை மறு சுத்திகரிப்பு செய்யும் வசதி இருந்தால்தான் அனுமதி வழங்கப்படும் என முதலமைச்சர் பழனிசாமி கூறினார்.