சுய உதவிக் குழுக்களுக்கு எந்த உத்தரவாதமும் இல்லாமல் 20 லட்சம் வரை கிராம வங்கிகள் கடன் வழங்கி வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு கிராம வங்கிகளின் மாநில அளவிலான வங்கிக் கடன் வழங்கும் விழா சேலத்தில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பயனாளிகளுக்கு வங்கி கடன்களை வழங்கினார். விழாவில் பேசிய அவர், பாண்டியன் மற்றும் பல்லவ கிராம வங்கி இணைந்து தமிழ்நாடு கிராம வங்கியாக சிறப்பாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார். தமிழ்நாடு கிராம வங்கிக்கு உள்ள 630 கிளைகளை விரைவில் ஆயிரம் கிளைகளாக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அப்போது முதலமைச்சர் கூறினார்.
கிராம வங்கிகள் மூலம் விவசாயிகள், சுய உதவிக்குழுக்கள் மற்றும் ஏழைகளுக்கு மட்டுமே கடனுதவி வழங்கப்படுவதாகவும், மகளிர் சுய உதவிக்குழுவினர் வாங்கிய கடனை 99 சதவீதம் திருப்பி செலுத்தி உள்ளதாக முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்தார். முதலமைச்சராக இருந்தால் கூட உத்தரவாதம் வாங்கித்தான் வங்கிகள் கடன் வழங்குவதாக தெரிவித்த முதலமைச்சர், ஆனால் கிராம வங்கிகள் சுய உதவிக் குழுக்களுக்கு எந்த வித உத்தரவாதமும் இல்லாமல் 20 லட்சம் வரை கடன் வழங்குவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். மகளிர் சொந்த முயற்சியில் முன்னேற்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு ஊக்கப்படுத்துவதாக முதலமைச்சர் குறிப்பிட்டார்.